நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்!
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாகத்திற்காக அதன் அருகேயுள்ள சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களின் 633 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
நிலங்களை கையகப்படுத்தும் முன் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று வசிப்பிடம் அமைத்துத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக கிராம மக்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிராம மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரும் வரை, நிலங்களை கையகப்படுத்த அரசுக்கு இடைக்கால தடை விதித்தனர். நீதிமன்ற உத்தரவால் மகிழ்ச்சியடைந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் சின்ன உடைப்பு கிராம மக்கள் தெரிவித்தனர்.