நீலகிரிக்கு அரசு பேருந்துகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை!
நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர தடை விதித்து, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் அண்மை காலமாக தமிழக அரசு பேருந்துகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துவரப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்திற்கு அரசு பேருந்துகளில் வருபவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தணிக்கை செய்யும்போது பேருந்துகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.