நெருங்கும் பொங்கல் பண்டிகை! : தீவிரமடையும் வெல்ல உற்பத்தி
பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி சேலத்தில் வெல்லம் உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..!
தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி போன்ற மாவட்டங்களில்தான் வெல்ல உற்பத்திக்கு தேவையான கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் வெல்ல உற்பத்தி தொழிலை நம்பியே உள்ளது. இப்பகுதிகளில் நாள்தோறும் உற்பத்தி செய்யப்படும் 50 முதல் 70 டன் வரையிலான வெல்லத்தை, அதன் உற்பத்தியாளர்கள் தினசரி ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஓமலூர், கருப்பூர், தாரமங்கலம், கமலாபுரம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள கரும்பாலைகளில் தயாராகும் வெல்லம், செவ்வாய்பேட்டையில் உள்ள வெல்ல மண்டிக்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்ல உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.
அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கரும்பாலைகளுக்கு கொண்டு வரப்படும். அவற்றில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் கரும்புச் சாறு, பெரிய கொப்பறையில் காய்ச்சப்பட்டு, மாற்று கொப்பறையில் பதப்படுத்தப்பட்டு, உருண்டை பிடித்த பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சும் சக்கையும் வீணாகாமல் அடுப்பிற்கு விறகாக பயன்படுத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெல்லத்திற்கு வியாபாரிகள் ஏராளமான ஆர்டர்களை கொடுத்து வருகின்றனர். இதனால் வெல்ல உற்பத்தி இரு மடங்கு அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக 30 கிலோ எடைகொண்ட ஒரு சிப்பம் வெல்லம், ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 470 ரூபாய் வரை விற்பனையாவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகை நாள் நெருங்க நெருங்க வியாபாரிகள் கூடுதலாக வெல்லத்தை வாங்கி இருப்பு வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், வழக்கத்தை விட அதிகமாக நாள்தோறும் 100 முதல் 150 டன் வரை வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.