நெல்லை அரசு மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு - நோயாளிகள் அவதி!
நெல்லை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு குடிப்பதற்கு வெந்நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் கடைகள் முன்பு பக்கெட்டுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் வரிசையாக நிற்கும் அவலம் நிலவுகிறது.
குளிர்காலத்தின்போது, அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு வார்டுகளில் உள்ள தாய்மார்களுக்கு குடிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு வெந்நீர் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு வார்டில் அமைக்கப்பட்டுள்ள வெந்நீர் வழங்கும் இயந்திரம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து செயல்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், வெந்நீருக்காக பக்கெட்டுகளை வாங்குவதால் தேவையில்லாத கூடுதல் செலவு ஆவதாகவும், கடைகள் முன்பு பக்கெட்டுகளுடன் பல மணி நேரம் கால்கடுக்க நிற்கவேண்டி உள்ளதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.