நெல்லை அருகே உணவக உரிமையாளர் மீது கொலை வெறி தாக்குதல் - இளம் சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் கைது!
நெல்லை அருகே கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 6 இளம் சிறார்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே பள்ளக்கால் புதுக்குடி பகுதியை சேர்ந்த மசூது என்பவர் தனது ஹோட்டலில் பணி முடித்து வீடு திரும்பியபோது, அவரை வழிமறித்து ஒரு கும்பல் வெட்டியது. மேலும் , அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியது.
இது தொடர்பாக, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் உதவியோடு, தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டி மற்றும் 6 இளம் சிறார்கள் உட்பட 7 பேரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2022 -ஆம் ஆண்டு சூர்யா என்ற மாணவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு பழிவாங்கும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.