நெல்லை அருகே சட்டக் கல்லூரி மாணவர் கொலை!
நெல்லை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகன் மணிகண்டன். இவர் சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறைக்கு சொந்த ஊரான சேரன்மகாதேவி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர் மணிகண்டனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் கோடரங்குளம் பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும், இக்கொலையில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணிகண்டனை சிவராமனின் உறவினரான மாயாண்டி கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.