பட்டாவுக்காக பரிதவிப்பு : 6 தலைமுறைகளாக தொடரும் போராட்டம் - சிறப்பு தொகுப்பு!
சென்னை ராயபுரம் தொகுதியில் வசிக்கும் மக்கள் 6 தலைமுறைகளாக பட்டாவிற்காக அலைக்கழிக்கபட்டு வருகிறார்கள். பட்டா வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி மூன்றரை வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
சென்னையில் பூர்வகுடி மக்கள் தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்பு என கூறி மக்களை வெளியேற்றுவது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறுத்தி அச்சுறுத்துவது என அந்த பட்டியல் நீள்கிறது. இதுபோதாதென்று, பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்காமலும் தமிழக அரசு தற்போது அலைக்கழித்து வருகிறது...
ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போஜராஜன் நகர், பெரியபாளையத்தம்மன் கோவில், காத்பாடா, ஸ்டான்லி நகர், லெபர் லேன் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பல முறை ஆட்சிகள் மாறி, பல்வேறு தலைவர்கள் ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தாலும், இந்த பட்டா பிரச்னைக்கு மட்டும் இதுவரை ஒரு விடியல் ஏற்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் ராயபுரம் தொகுதி மக்கள்.
எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் அரசியல் கட்சியினர் ராயபுரம் தொகுதிக்கு வருவார்கள். இந்த முறை சர்வ நிச்சயமாக பட்டா வழங்கிவிடுவோம் என உறுதியளிப்பார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் வெற்றிப்பெற்றவர்களையும் பார்க்கவே முடியாது. பட்டா பிரச்னை பழையபடியே கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருக்கிறது என வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
பணம் இருப்பவர்கள் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து பட்டா வாங்கி விடுகின்றனர். ஆனால், கூலி வேலை பார்க்கும் தங்களுக்கு அதற்கெல்லாம் வசதி வாய்ப்பு இல்லாததால் இதுவரை பட்டா பெற முடியவில்லை என ஆதங்கத்துடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பட்டா மட்டும் இப்பதி மக்களின் பிரதான பிரச்னை இல்லை. அதை தாண்டியும், குடிநீர் பிரச்னை, கால்வாய் பிரச்னை, கழிவுநீர் தேக்கம், சுகாதார சீர்கேடு என அடுத்தடுத்து பல பிரச்னைகள் அணிவகுத்து நிற்கின்றன.
தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடமே உள்ள நிலையில், மீண்டும் பழைய வாக்குறுதிகளோடு வேட்பாளர்கள் இப்போதே வரத் தொடங்கி விட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தமுறையாவது தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். தங்கள் நிலத்திற்கு பட்டா கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் ராயபுரம் பகுதி மக்கள் காத்துள்ளனர். இப்போதைக்கு அந்த மக்களால் முடிந்தது நம்புவதும், காத்திருப்பதும் மட்டும்தான்...