பதற வைக்கும் சம்பவம் : மாணவிகளை மது குடிக்க வற்புறுத்திய ஆசிரியர்!
திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் பற்றிய செய்தி தொகுப்பை சற்று விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் செயல்பட்டு வரும் சல்மா மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் இந்த பொன்சிங். தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பள்ளி மாணவ - மாணவிகளை பொன்சிங் அழைத்துச் சென்றுள்ளார். விளையாட்டுப் போட்டிகள் முதல்நாளில் முழுமையாக நிறைவடையாத நிலையில் மறுநாளும் விளையாட வேண்டிய சூழல் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டது.
அன்று இரவே உடன்குடிக்கு திரும்பி மீண்டும் மறுநாள் காலை தூத்துக்குடிக்கு புறப்பட்டு வருவது கடினமானது எனக்கூறி மாணவ, மாணவியர்கள் அனைவரையும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கும் அதே அறையில் தங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் மது போதையில் தத்தளித்த பொன்சிங், தூங்கிக் கொண்டிருந்த சில மாணவிகளை எழுப்பி மது அருந்துமாறு வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பொன்சிங்கின் அநாகரீகமான செயல்களுக்கு மறுப்பு தெரிவித்த மாணவிகளை மது அருந்த கட்டாயப்படுத்தியதோடு, அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவுகளையும் அளித்துள்ளார்.
இரவு முழுவதும் அச்சத்துடனே தங்கியிருந்த மாணவிகள் அனைவரும் தூத்துக்குடியில் உள்ள தங்களின் இல்லங்களுக்கு திரும்பிய பின், விடுதி அறையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கின் அநாகரீக செயல்கள் குறித்தும் சொல்லி கதறி அழுதுள்ளனர். பெண் குழந்தைகளின் கதறலை கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கூடி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் பெரிதானதை அறிந்ததும் தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி, திருச்செந்தூர் காவல் உதவி ஆணையர், தாசில்தார் என சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளும் பள்ளிக்கு வந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கால் தொந்தரவுக்கு உள்ளான மாணவிகளையும் தனித்தனியாக அழைத்துப் பேசினர்.
உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கிற்கும், தனியார் பள்ளி நிர்வாகத்திற்கும் எதிரான போராட்டம் தீவிரமடையத் தொடங்கியதும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை பணியிலிருந்து நீக்கிவிட்டதாக பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இருப்பினும் பள்ளி மாணவிகளை மது குடிக்க வற்புறுத்தி தகாத முறையில் நடந்து கொண்ட உடற்கல்வி ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், கோவையில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போக்சோ வழக்கில் கைது திருச்செந்தூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியின் முதல்வர் சுவீட்லி, செயலாளர் சையது அகமது ஆகியோரும் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்கால தலைமுறையான மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தந்து நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்புமிக்க ஆசிரியரே, மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்றிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.