பதவியை துறந்த ஜஸ்டின் ட்ரூடோ - தமிழக வம்சாவளி பெண்ணுக்கு அடுத்த பிரதமர் வாய்ப்பு - சிறப்பு கட்டுரை!
ராக்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலமாக தாம் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்தவுடன், கனடா நாடாளுமன்ற கட்டடத்துக்கு வெளியே மக்கள் நடனமாடி கொண்டாடியுள்ளனர்.
இந்தியா மீது ஜஸ்டின் ட்ரூடோ காட்டிய மோதல் போக்கே, அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
1970 மற்றும் 80-களில் கனடாவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய லிபரல் கட்சியின் தலைவர் முன்னாள் கனடா பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் தான் ஜஸ்டின் ட்ரூடோ.
லிபரல் கட்சி கடும் வீழ்ச்சியில் இருந்த காலக் கட்டத்தில், யாரும் எதிர்பாராத சமயத்தில், ஜஸ்டின் ட்ரூடோ, தனது தலைமையில், 2015ம் ஆண்டு, லிபரல் கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வந்தார். பிறகு கனடாவில் நடந்த இரண்டு பொது தேர்தல்களிலும் காலிஸ்தான் ஆதரவு சிறிய கட்சியின் ஆதரவில்தான், ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி நடத்தி வந்தார்.
1990-களில் இருந்தே லிபரல் கட்சியில், ஜான் கிறிஸ்டியன் முதல் இப்போதைய ஜஸ்டின் ட்ரூடோ வரை கட்சித் தலைவர்களாக காலிஸ்தான் தீவிரவாத ஆதரவாளர்களுக்கே அதிக வாய்ப்பு தரப்பட்டது.
ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் ஒரு காலிஸ்தான் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012ம் ஆண்டு அப்போதைய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஒரே இந்தியா என்பதை ஆதரித்தாலும் காலிஸ்தான் இயக்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
2023ம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில், சீக்கிய தீவிரவாதம் குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் காலிஸ்தான் இயக்கங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்ற ஸ்டீபன் ஹார்பரின் நிலைப்பாட்டையே மீண்டும் கூறினார்.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் முக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதியாவார்.
இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த, பிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது இந்தியா குற்றம்சாட்டியது. 2022 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதி என NIA அறிவித்தது.
கனடாவில் உள்ள நிஜ்ஜாரின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு எதிரான உள்ளன என்று கனடா அரசுக்கு இந்தியா தெரிவித்தது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தங்களுக்குத் தெரியும் என்று கனடா கூறினாலும் நிஜ்ஜார் மீது எந்த நடவடிக்கையும் கனடா அரசு எடுக்கவில்லை.
இந்நிலையில், கனடாவில் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசு உள்ளது என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். கனடா உளவுத்துறையிடம் ஆதாரம் இருப்பதாக ட்ரூடோ தெரிவித்தார். ஆனாலும் அதற்கான ஆவணங்கள் எதையும் ட்ரூடோ தரவில்லை. மேலும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய ட்ரூடோ, இந்த கொலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீதும் குற்றம் சாட்டினார்.
ஜஸ்டின் ட்ரூடோ அபத்தமான பொய்யை சொல்வதாக பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, ஜஸ்டின் ட்ரூடோ அமைச்சரவையில் இந்தியாவில் பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் தூண்டும் பலர் இடம்பெற்றுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தது.
கனடாவில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவு சீக்கிய வாக்குகளைக் குறி வைத்து ட்ரூடோ இப்படி செய்ததாக கூறப்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்காமல், தேவையில்லாத அரசியல் செய்கிறார் என்று கனடா மக்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர்.
இந்தியாவுடன் மோதல் போக்கை ட்ரூடோ தீவிரமாக்கியது, அவரது லிபரல் கட்சிக்குள்ளேயே பெரும் பிரச்சனையாக வெடித்தது. சீன் கேசி மற்றும் கென் மெக்டொனால்ட் உள்ளிட்ட பல உயர்மட்ட லிபரல் கட்சி உறுப்பினர்கள் ட்ரூடோவின் தலைமையின் மீதான அதிருப்தியை நேரடியாகவே வெளிப்படுத்தினர்.
இந்த சூழலில், ஆட்சிக்கு தந்த ஆதரவை புதிய ஜனநாயகக் கட்சி, திரும்பப் பெற்றது. மேலும், கடந்த அக்டோபர் மாதம், லிபரல் கட்சி உறுப்பினர்களே ஜஸ்டின் ட்ரூடோவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தினர். சொந்த கட்சியினரின் கோரிக்கையை நிராகரித்ததோடு, அடுத்த பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியை வழிநடத்தப் போவதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எழுந்த கடும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் ஜஸ்டின் ட்ரூடோவுக்குத் தடுமாறினார். ஏற்கனவே துணை பிரதமரும் ,நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் பதவி விலகியதைத் தொடர்ந்து நாட்டில் நிதி நிர்வாகம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
ஒட்டு மொத்தமாக மக்கள் செல்வாக்கு சரிந்த நிலையில், சொந்த கட்சியே தனக்கு எதிராக திரும்பிய நிலையில், இந்தியாவைச் சீண்டிய காரணத்தால், வேறுவழி இல்லாமல், தனது பதவி விலகலை ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அடுத்த பிரதமராக தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் முன்னாள் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகவும், ராணுவ துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் மற்றும் ஜக்மித் சிங்கும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.