பயங்கரவாதிகளின் பக்கம் நிற்கும் திமுக அரசு - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!
தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியல்ல; காட்டாட்சி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி அத்வானி கோவை வந்த போது அல்உம்மா இயக்கத்தினரால் தொடர் வெடி குண்டுகள் வைக்கப்பட்டதில், 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1984 இல் ராமகோபாலனை அரிவாளால் வெட்டிய பாஷா தான் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி. அவரது இறுதி ஊர்வலத்தில் குடும்பத்தினர் 30, 40 பேர் செல்லலாம் என்று போலீசாரோ, அரசாங்கமோ சொல்லியிருந்தால் நாகரீகம் தெரிந்தவர்கள் என்று சொல்ல முடியும்.
கடந்த 15 நாட்களுக்கு முன் வங்க தேசத்தில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களுக்காக, பா.ஜ.க போன்ற ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதே சமயம், ஒரு பயங்கரவாதியின் இறுதி ஊர்வலத்துக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் பங்கேற்பதை அனுமதித்துள்ளனர்.
தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. சட்டத்தின் ஆட்சியில்லை என்பதற்கு, கோயம்புத்துாரில் நடந்த சம்பவம் எடுத்துக்காட்டு.
மக்களால் துாக்கியெறியப்பட வேண்டிய பொதுஜன விரோத அரசு ஸ்டாலின் அரசு. இந்த அரசு ஹிந்துக்களுக்கு விரோதமாக, பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பது கண்டிக்கத்தக்கது" என தெரிவித்தார்.