பற்றி எரியும் வங்கதேசம் : கேள்விக்குறியான இந்துக்கள் பாதுகாப்பு - சிறப்பு கட்டுரை!
வங்க தேச இந்துக்கள் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். முகமது யூனுஸின் கீழ் இடைக் கால அரசு தீவிரவாதத்தையும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் தீவிரப்படுத்தி உள்ளது. நாட்டில் இந்துகளுக்கு எதிரான வெறியை முகமது யூனுஸ் தூண்டுவதற்கு என்ன காரணம் ? வங்க தேசத்தில் HINDU PHOBIA பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
1971ம் ஆண்டு தனி சுதந்திர நாடாக வங்கதேசம் உருவானது. வங்கதேச விடுதலை போரில், பாகிஸ்தான் ராணுவத்தினரால் சுமார் முப்பது லட்சம் பேர் கொல்லப்பட்டனர். வயது வித்தியாசம் இன்றி பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள். பாகிஸ்தான் 1971-ஆம் ஆண்டு செய்த அட்டூழியங்களுக்கு இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை. மாறாக, முகமது அலி ஜின்னாவின் பாகிஸ்தான் திட்டத்தை உடைக்க இந்தியா செய்த சதி தான் வங்கதேச மக்களின் விடுதலை போராட்டம் என்று பேசி வருகிறது.
குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கி வரும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, வங்கதேசத்திற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஷேக் ஹசீனா ஆட்சியில், 1971ம் ஆண்டு போர்க் குற்றவாளிகளைத் தேர்ந்தெடுத்து தண்டித்தார். 2010 ஆம் ஆண்டில் இப்படிப்பட்டவர்களைத் தண்டிக்க சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கினார். மேலும் பாகிஸ்தான் ஆதரவு ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பையும் ஷேக் ஹசீனா தடை செய்தார்.
2013-ஆம் ஆண்டில் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதர் மொல்லாவுக்கு போர்க் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு விசுவாசத்துடன் இருந்ததால் அப்துல் காதர் தூக்கிலிடப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சௌத்ரி நிசார் அலி கான் குற்றம் சாட்டியிருந்தார்.
1975 ஆண்டு ஷேக் முஜிபுரின் படுகொலைக்கு பின், ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் தந்தது. ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியில், வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகள் மிகவும் நெருக்கமாக இருந்தன. இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பும் கணிசமாக வளர்ந்தது. வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பு இருந்தது.
வங்க தேசத்தில், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கும் சந்ததியினருக்கும் அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. 2018ம் ஆண்டு இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனை அடுத்து ஷேக் ஹசீனா அரசு, அனைத்து வகையான இட ஒதுக்கீட்டையும் நிறுத்தியது. கடந்த ஆண்டு, ஜூன் மாதம், அந்நாட்டு உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தியது.
இதையடுத்து இளைஞர்களின் போராட்டம் ,ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் மாணவர் இயக்கத்தினர் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தில் சுமார் 300பேருக்கும் மேல் உயிரிழந்தனர். வலுக்கட்டாயமாக பிரதமர் பதவியிலிருந்து விலக்கப் பட்ட ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
இராணுவ ஆட்சியை விரும்பாத மாணவர் அமைப்பினர், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசை ஏற்படுத்த வற்புறுத்தினர்.
இதையடுத்து பொறுப்பேற்ற முகமது யூனுஸ் இடைக்கால அரசின் கீழ், இந்துக்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்களும், அடக்குமுறைகளும் தீவிரமாகியுள்ளன. இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும் வன்முறை தாக்குதல்கள் நடத்துவது ஒன்றும் வங்கதேசத்தில் புதிதல்ல.
2013ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 2021 செப்டம்பர் வரை, இந்துக்கள் மீது சுமார் 4000 வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக Ain O Salish Kendra ‘ஐன் ஓ சலிஷ் கேந்திரா என்ற வங்கதேச மனித உரிமைக் குழு தெரிவித்திருக்கிறது.
தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில், நவராத்திரி திருவிழாவின் துர்கா பூஜையில் இந்துகளின் வீடுகள் மற்றும் கோயில்கள் மீது மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் பின் மோர்தாசாவின் வீடுதீவைத்து கொளுத்தப்பட்டது. இவர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத் தக்கது.
வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினரை ஷேக் ஹசீனாவின் மதச்சார்பற்ற அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களாகவே அங்குள்ள பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இஸ்லாமியர் பார்க்கின்றனர். கடந்த நான்கு மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்கள் இந்துக்களுக்கு எதிராக நடந்துள்ளன.
இந்நிலையில், வகுப்புவாத அட்டூழியங்களை விசாரிக்கவும், இந்துக்களுக்கு மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கவும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று இந்துக்கள் கேட்கின்றனர். மேலும் கோவில் சொத்துக்களின் சட்டப் பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புகாக சிறுபான்மை விவகார அமைச்சகம் அமைக்க வலியுறுத்தியுள்ளனர். வங்க தேச கல்வி நிறுவனங்களில் சிறுபான்மை மத நடைமுறைகளுக்கு மரியாதை மற்றும் பாலி மற்றும் சமஸ்கிருத கல்வி வாரியங்களை மேம்படுத்தவும் வலியுறுத்தியுள்ள இந்துக்கள், ஐந்து நாள் துர்கா பூஜைக்கு விடுமுறை அளிக்குமாறும் கேட்டு கொண்டுள்ளனர்.
இதற்காக, இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் நடத்திய அமைதியான போராட்டங்கள் தேசத்துரோகமாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த சூழலில் இந்த கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்திய இஸ்கான் அமைப்பின் துறவி சாரு சின்மய் சந்திர தாஸ் பிரம்மச்சாரி தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் 32 வயதான வழக்கறிஞர் ‘சைஃபுல் இஸ்லாம்’ சிட்டகாங் நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப் படுவதற்கு இந்தியா கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
ஐநா பொதுச்சபை கூட்டத்தொடரான 79வது UNGA அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க சென்ற வங்கதேச இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸ், ஜோ பைடனையும், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபையும் தனித்தனியாக சந்தித்துள்ளார். அதே நேரத்தில், பல உலக தலைவர்களை சந்தித்த போதிலும் முகமது யூனுஸை சந்திக்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தீபாவளிக்கு வாழ்த்து சொன்ன ட்ரம்ப், வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருந்தார். அதிபராக வெற்றிபெற்ற நிலையில், வங்கதேசத்தில் இந்து துறவி கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
தாராளமயம், சமூக நீதி மற்றும் சமத்துவம் போன்ற கருத்துக்களைப் பறைசாற்றும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், எல்லை தாண்டி, இந்துக்களுக்கு எதிரான, வன்முறைகளைத் தெரிந்தே அனுமதிக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் .
வங்கதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடாக நிறுவப்பட்டது. ஆனால் 1980ம் ஆண்டு, ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்டது. 2010ம் ஆண்டு வங்கதேச உச்சநீதிமன்றம், ஆரம்பத்தில் அரசியலமைப்பில் எழுதப்பட்ட மதச்சார்பின்மைக் கொள்கை இன்றைக்கும் நாட்டில் பொருந்தும் என்று கூறியது.
1951ம் ஆண்டு வங்க தேசத்தில் 22 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். ஆனால் இப்போது வெறும் 7.5 சதவீதமே இந்துக்கள் உள்ளனர். முகமது யூனுஸ் தலைமையின் கீழ் வங்க தேசத்தில், இந்துக்களுக்கு எதிரான திட்டமிட்ட அட்டூழியங்களும், இந்திய எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு உணர்வும் வகுப்புவாத கலவரங்களும் அதிகரித்துள்ளன.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள வங்க தேச இந்துக்களை இப்போது இல்லை என்றால் எப்போதும் காப்பாற்ற முடியாது என்பது தான் கசப்பான உண்மை.