பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
அரசு பள்ளிகளுக்கான இணையதள சேவை கட்டண நிலுவைத் தொகை விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசுப் பள்ளிகளுக்கான இணையதள சேவை கட்டண நிலுவை குறித்து தாம் சுட்டிக் காட்டியதை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக நிலுவை தொகை இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து வந்ததாகவும், ஆதாரத்துடன் நிரூபித்த பின்னர், அவசரமாக மொத்த நிலுவை தொகையையும் வழங்க ஆணை பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அமைச்சருக்குத் தனது துறை சார்ந்த பணிகள் குறித்த விவரங்கள் தெரியவில்லையா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுமென்றே பொய் கூறி வந்தாரா என வினவியுள்ளார்.
மேலும், மாணவ சமுதாயத்துக்கான பொறுப்பான துறை என்பதை நினைவில் கொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் செயல்பட வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.