பள்ளிக் கல்வியை சீர்குலைத்த டெல்லி ஆட்சியாளர்கள் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்தவர்கள் பள்ளிக் கல்வியை சீர்குலைத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
டெல்லியில் நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டம் உள்பட பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அசோக் விஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள்- பள்ளிக் கல்வியை சீர்குலைத்ததாக குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு டெல்லிக்கு கொடுத்த பணத்தில் பாதியை கூட கல்விக்காக செலவிடவில்லை என்றும் அவர் சாடினார். ஆம் ஆத்மி அரசு டெல்லி மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொணடு வரவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும் தனக்காக ஒரு வீடுகூட கட்டியதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றும், ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக 4 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கி அவர்களின் கனவை நனவாக்கி இருப்பதாகவும் பிரதமர் கூறினார். எனக்காக மாளிகை கட்டியிருக்க முடியும். ஆனால் மக்களுக்கு வீடு கொடுப்பதே எனது கனவு என்றும் மோடி குறிப்பிட்டார்.