பழனியில் 24 மணி நேர மது விற்பனையை காவல்துறை கண்டுகொள்வதில்லை - பாஜக குற்றச்சாட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் நீதிப்பேரணியில் ஈடுபட முயன்றனர். பழனியில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதையடுத்து கைதான மகளிர் அணியினரை சந்திக்க சென்ற மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜனநாயக முறையில் போராட முயலும் பாஜகவினரை முடக்குவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
மகளிர் அணியினர் அடைத்து வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு வெளியே 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதைக்கண்ட கனகராஜ் திருமண மண்டபத்தை ஒட்டியுள்ள மதுபானக்கூடத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக கூறியபடியே பாஜகவினருடன் அங்கு சென்றார்.
மதுபான கூடத்துக்குள் மதுபானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை சுட்டிக்காட்டிய அவர், திருமண மண்டபத்தை ஒட்டி நடைபெறும் மது விற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்ளவே இல்லை என குற்றம் சாட்டினார்.