பாரதியார் பிறந்த நாள் - மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, எல்.முருகன் வாழ்த்து!
மகாகவி பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமித் ஷா விடுத்துள்ள பதிவில், நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான மஹாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்கள் பிறந்த தினத்தில் அவருக்கு எனது வீர வணக்கம்.
பாரதி தனது பிரகாசமான ஞானத்தால் நமது சுதந்திர போராட்டத்தின் வேட்கையை ஒளிரச் செய்து, தமிழ் சமூகத்தை அதன் உண்மையான சுய தன்மைக்கு மாற்ற பெரும்பாடுபட்டவர். அவரது இலட்சியங்கள் நமக்கு நித்ய மூலமாக இருந்து என்றென்றும் ஊக்கமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டா விடுத்துள்ள பதிவில், "மஹாகவி பாரதியார்" என்று போற்றப்படும் பழம்பெரும் தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதிக்கு அவரது பிறந்த தினத்தில் என் அஞ்சலி.
அவரது உணர்வு மிக்க கவிதைகள் எப்போதும் தேசபக்தி உணர்வுகளைத் தூண்டக்கூடியவை, சமத்துவம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக அவரது கருத்துக்கள் இன்றும் நம்மை வழிநடத்துகின்றன. அவரது அடிச்சுவடுகளை நாம் பின்பற்றும்போது, பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமை, பெண்களுக்கான உரிமைகளில் கவனம் செலுத்தியது, நம் சிறந்த கவிஞருக்கு ஒரு பொருத்தமான அஞ்சலியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள செய்தில், “பாரத தேசமென்று பெயர்சொல்லு வார்-மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.”
நமது பாரத தேசத்தின் பெருமைமிகு விடுதலைப் போராட்ட வீரரான ‘முண்டாசுக் கவிஞன்’ சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தனது தேசப்பக்தி மிகுந்த தமிழ்ப் பாடல்கள் மூலம், சமூகத்தில் நிலவி வந்த சாதியப் பாகுபாடுகள் களைந்திடவும், நமது ஒற்றுமை ஒன்றே சுதந்திரத்திற்கான உரிய வழி என்றறிந்து, மக்களை ஒன்றிணைப்பதிலும் பெரும்பங்காற்றியவர்.
அவரிடத்தில் இருந்த தமிழாற்றல் கொண்டு தலைச்சிறந்த தேசப்பாடல்கள் இயற்றியவர், குழந்தைகள் முதலாக இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என்று அனைவரிடத்திலும் சுதந்திரத் தாகத்தை தீவிரமாக ஏற்படுத்தினார்.
தேச விடுதலைக்காக இடையறாது அவராற்றிய பணிகள் ஒவ்வொன்றும், எக்காலத்திற்கும் அழியாமல் அவரது புகழ் பரப்பிக் கொண்டே இருக்கும். அய்யா ‘மகாகவி’ சுப்ரமணிய பாரதியார் பிறந்த தினமான இன்று அவர்களது தியாக ஆன்மாவை பெருமையுடன் நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.