பாரத மாதா சிலையை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த பாஜகவினர் !
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத மாதா சிலையை 4 மணி நேர பேச்சுவார்த்தைப் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பாஜக அலுவலகத்திற்கு அக்கட்சியினர் எடுத்துச் சென்றனர்.
விருதுநகரில் பாஜக தலைமை அலுவலகம் முன் நிறுவப்பட்ட பாரத மாதா சிலை, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டதாகக்கூறி வருவாய் துறை மற்றும் போலீசாரால் அகற்றப்பட்டது.
முன்னறிவிப்பின்றி பட்டா இடத்திற்குள் நுழைந்து பாரத மாதா சிலையை எடுத்து சென்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலையை திரும்ப ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி விருதுநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாரத மாதா சிலையை பா.ஜ.க.வினரிடமே ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். அதன்படி பாரத மாதா சிலையை திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை பாஜகவினர் குவிந்தனர்.
சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்பிடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பாரத மாதா சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மேள தாளங்கள் முழங்க வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.