பாலியல் தொல்லையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? : தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த, கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டும், இன்னும் அவரைக் கைது செய்யாதது ஏன்? என தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் என்பவர் தன்னுடன் நெருங்கி பழகினால் சிண்டிகேட்டில் பதவி பெற்றுத் தருவதாக கூறி பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்திருந்தார்.
ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை எனவும் கல்லூரி பெண் முதல்வர் குற்றம்சாட்டியிருந்தார்.
வழக்கை திருமங்கலம் மகளிர் போலீஸார் விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியது. கல்லூரியின் பெண் முதல்வருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
(NEXT)இந்த வழக்கில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.