பிஜி தீவு வாழ் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத்தர நடவடிக்கை!
பிஜி தீவில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்திருப்பது குறித்த தகவல் அங்கு வசிக்கும் தமிழர் ஒருவர் வெளியிட்ட வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Advertisement
பிஜி தீவு வாழ் தமிழர்களின் தற்போதைய தலைமுறையினருக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ, பேசவோ தெரியவில்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் அரசுமுறை பயணமாக பிஜி தீவுக்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம், அங்குள்ள தமிழ் வம்சாவளியினர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அவர்களுக்கு தமிழ் கற்றுத்தர 3 தமிழ் ஆசிரியர்களை நியமித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்னும் 2 மாதங்களில் 3 தமிழ் ஆசிரியர்களும் பிஜி தீவில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான செய்திகள் இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில், பிஜி தீவில் வசிக்கும் தமிழர் ஒருவர் வெளியிட்ட வீடியோ மூலம் இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.