For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரதமர் மோடியின் ராஜ தந்திரம் : கயானாவை இந்தியா குறிவைப்பது ஏன்? சிறப்பு கட்டுரை!

09:00 PM Nov 21, 2024 IST | Murugesan M
பிரதமர் மோடியின் ராஜ தந்திரம்   கயானாவை இந்தியா குறிவைப்பது ஏன்  சிறப்பு கட்டுரை

கரீபியன் நாடான கயானாவுக்கு பிரதமர் மோடி மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க அரசு முறை பயணம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பயணமாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் கயானா பயணம், இந்தியாவுக்கு எப்படி பலன் தரும் ?அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பெட்ரோல் உள்ளிட்ட எரிவாயு வளங்கள் கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக கயானா மாறி இருக்கிறது.

Advertisement

கயானாவில் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களின் மதிப்பீடு 11 பில்லியன் பெட்ரோலுக்கு சமமான பீப்பாய்கள் ஆகும். இது, குவைத்தின் இருப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்று அமெரிக்க எரிசக்தி தகவல் முகமையின் அறிக்கை தெரிவிக்கிறது.

கயானா ஒரு எண்ணெய் வளமிக்க நாடாக உயர்ந்து வருகிறது. இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டிலும் கயானா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனில் பற்றாக்குறை உள்ளது. இந்தியாவுக்கு வருங்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட எரிசக்தி அதிகம் தேவைப்படும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

Advertisement

எனவே, இந்தியாவுக்கு, கயானா, சுரினாம், ட்ரினிடாட் டொபாகா, கிரெனடா போன்ற தெற்கு எரிசக்தி மண்டலங்களில் கால் ஊன்றுவது , புவிசார் அரசியல் ரீதியாக முக்கியமானதாகும்.

உலகளாவிய நாடுகள் கரீபியன் மண்டலத்தைக் குறிவைக்கும் நிலையில், பிரதமர் மோடி கயானாவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. 1968ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கயானா பயணத்துக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும்.

1965ம் ஆண்டு முதல் இந்தியாவுடன் தூதரக உறவில் கயானா இருந்து வருகிறது. இந்தியாவும் கயானாவும் நாகரிக தொடர்புகள் மற்றும் நெருங்கிய சுமூக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

கயானா கடந்த 180 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த இந்தியர்களின் தாயகமாக இருந்து வருகிறது. கயானாவின் மக்கள் தொகையில், இந்திய வம்சாவளியினர் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் உள்ளனர். அதில் 29 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வருகையை கவுரவப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மே 5ம் தேதியை இந்திய வருகை தினமாக கயானா அரசு கொண்டாடி மகிழ்கிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரவு படி, சுமார் 3,20,000 இந்திய வம்சாவளியினர் கயானாவில் வாழ்கின்றனர்.

அதிபர் முகமது இர்ஃபான் அலி உட்பட அவரின் மூதாதையர்கள் 19ம் நூற்றாண்டில் ஒப்பந்த தொழிலாளர்களாக கரீபியன் பகுதிக்கு ஆங்கிலேயர்களால் அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது வரலாறு. கரிகோம் என்பது 21 கரீபியன் நாடுகளின் குழுவாகும். அவற்றில் 15 நாடுகள், உறுப்பு நாடுகளாகவும் ஆறு நாடுகள் துணை உறுப்பினர்களாகவும் உள்ளன.

இதன் முதல் உச்சிமாநாடு 2019ஆம் ஆண்டு நடந்தது. அப்போதே, காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக 150 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வரியை இந்தியா வழங்கி இருந்தது.

இந்த ஆண்டு இரண்டாவது கரிகோம் உச்சிமாநாடு நடக்கிறது. இதனால்,எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மருந்துகள், தொழில்நுட்பம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மனிதவளம் ஆகியவற்றில் இந்தியாவுக்கும் கயானாவுக்கும் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கெனவே, இருநாட்டு அமைச்சர்கள் கொண்ட கூட்டு ஆணையத்தை இந்தியா-கயானா உருவாக்கி உள்ளன. மேலும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) மற்றும் ஜார்ஜ்டவுன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் & இன்டஸ்ட்ரி (GCCI) ஆகியவற்றுக்கு இடையேயும் கூட்டு வணிக கவுன்சில் அமைக்கப் பட்டுள்ளது.

இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில், கயானாவில் உள்ள மாணவர்களுக்கு கலை அறிவியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) திட்டத்தின் மூலமும் கயானாவுக்கு இந்தியா பல்வேறு துறைகளில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது.

கயானாவின் விவசாயம் மற்றும் தகவல் தொழில்நுட்ப தேவைகளுக்காக இந்தியா கடன் வசதிகளை விரிவுபடுத்தி இருக்கிறது. உயிரி எரிபொருள், ஆற்றல்சக்தி , கனிமங்கள் மற்றும் மருந்துகள் போன்ற துறைகளில் கயானாவில் உள்ள வாய்ப்புகளை இந்திய நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

குறிப்பாக மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி மற்றும் இந்தியன் ஆயில் ஆகிய நிறுவனங்களும் கயானாவின் பெட்ரோல் மற்றும் எரிசக்தி துறையில் களம் இறங்கி உள்ளன. இந்த ஆண்டில் கயானாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, 25 மில்லியன் டாலர் மதிப்பில், தேசிய கிரிக்கெட் ஸ்டேடியம் உட்பட கயானாவின் பல திட்டங்களுக்கு இந்தியா உதவி செய்துள்ளது.

இந்தியா-கயானா பாதுகாப்பு உறவுகள் வளர்ச்சி பாதையில் உள்ளன. கடந்தாண்டு கயானாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ராணுவ லைன் ஆஃப் கிரெடிட் அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், இரண்டு டோர்னியர்-228 விமானங்கள் கயானாவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்தாண்டு, கடலில் செல்லும் பயணிகள் மற்றும் சரக்கு படகும் கயானாவுக்கு இந்தியா வழங்கி இருந்தது. இந்த ஆண்டு, இந்தியா கயானா இருதரப்பு வர்த்தகம் 106 மில்லியன் அமெரிக்க டாலராகும்.இது முந்தைய ஆண்டை விட 60 சதவிகித வளர்ச்சி யாகும்.

மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் விநியோகம் தடை படுவதால், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. இந்நிலையில், நாட்டின் எரிசக்தி ஆற்றலை மேம்படுத்த , கயானாவில் இந்தியா கவனம் செலுத்துகிறது. கயானா உள்ளிட்ட க்ரீவியன் நாடுகளில் இந்தியாவின் ஆதிக்கத்தை, பிரதமர் மோடியின் கயானா பயணம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement