பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! - மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.
Advertisement
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது மனைவி சிவரஞ்சனியை நவம்பர் 2-ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தார்.
கடந்த 6-ஆம் தேதி சிவரஞ்சனிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை அசைவின்றி இருந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்த நிலையில் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என சிபிஎம் கட்சியினர் குற்றம் சாட்டினர். மேலும், முருகேசனின் உறவினர்களுடன் இணைந்து சிபிஎம் கட்சியினரும் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மகப்பேறு மருத்துவர் ரம்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் போராட்டத்தை தொடர்ந்ததால், சிபிஎம் கட்சியை சேர்ந்த 19 பேர் மீது தடியடி நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இதற்கிடையே, மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு இந்திய மருத்துவ கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.