புதிய பள்ளி கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
மயிலாடுதுறையில் புதிய பள்ளி கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பனார்கோவில் அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இட நெருக்கடி பிரச்னை இருந்து வந்தது. இதற்கு தீர்வுகாண எண்ணிய கிராம மக்கள் ஒன்றிணைந்து, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் பெயரில் பள்ளிக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கி பதிவு செய்தனர்.
அந்த இடத்தில் புதிய பள்ளி கட்டடம் கட்ட கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்ததாரர் கிராம மக்கள் வாங்கிய இடத்தில் பள்ளி கட்டடத்தை கட்டாமல், பழைய பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை துவங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கட்டிட பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாங்கள் வாங்கிய இடத்தில்தான் புதிய பள்ளி கட்டடத்தை கட்ட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர்.