புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருமயம் அடுத்த வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், கனிமவளக் கொள்ளை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜகபர் அலி, லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கல்குவாரி தொடர்பாக புகார் அளித்ததால் அவரை லாரி ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கல்குவாரி உரிமையாளர் ராசு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு டிஜிபி-க்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை பரிந்துரை செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட டிஜிபி சங்கர் ஜிவால், ஜெகபர் அலி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.