புதுச்சேரி அருகே ஏரியில் உடைப்பு - கடலூர் பிரதான சாலையில் போக்குவரத்து துண்டிப்பு!
புதுச்சேரி அருகே மணப்பட்டு ஏரி உடைந்து, சாலையில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் கடலூர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் மற்றும் வீடூர் அணை திறப்பால், புதுச்சேரி எல்லை பகுதியான கன்னியக்கோயில் அருகே உள்ள மணப்பட்டு ஏரி உடைந்து , புதுச்சேரி - கடலூர் பிரதான சாலையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால், புதுச்சேரி - கடலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே அவசர தேவைக்காக வெளியே செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை தண்ணீரில் தள்ளிக் கொண்டும், வயதானவர்களை தூக்கிக் கொண்டும் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.