புத்தாண்டில் கொடூர தாக்குதல் : பின்னணியில் ISIS, உறுதிப்படுத்திய FBI - சிறப்பு கட்டுரை!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திட்டமிட்டு கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது ? தாக்குதலுக்குப் பின்னால் என்ன சதி இருந்தது? விசாரணையில் FBI கண்டுபிடித்தது என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய நேரப்படி ஜனவரி முதல் நாள் மதியம், அமெரிக்காவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் போர்பன் தெருவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது மக்கள் கூட்டத்துக்குள் வாகனத்துடன் வந்த மர்ம நபர், வேண்டுமென்றே மோதி தாக்குதல் நடத்தியுள்ளார். மக்கள் மீது வாகனத்தை ஏற்றியவர், பிறகு, கீழே இறங்கி மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு காவல் துறையினர் உட்பட 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. போலீசாருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தாக்குதல் நடத்தியவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் தீவிரவாதச் செயலா என FBI அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இது இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலே என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆரம்பக் கட்ட விசாரணையில் தாக்குதலை நடத்தியவர் ,டெக்சாஸைச் சேர்ந்த 42 வயதான அமெரிக்க ராணுவ வீரரான ஷம்சுத்-தின் ஜப்பார் என்பதும்,10 ஆண்டுகளாக ராணுவப் பணியில் இருந்திருக்கிறார் என்பதும் அடையாளம் காணப் பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஜப்பார் 2002 ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கிலும், 2005 ஆம் ஆண்டு செல்லாத ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டியதற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்த வாகனத்தில், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொடி காணப்பட்டது, தீவிரவாத தொடர்புகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜப்பார் வந்த வாகனத்தில் துப்பாக்கிகள் மற்றும் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை, கூலருக்குள் மறைத்து வைக்கப்பட்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க வசதியாக வயரிங் செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மற்ற இடங்களிலும் வெடிபொருட்களை FBI அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பார் நிச்சயமாக இத்தாக்குதலை தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறும் FBI, மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் வெடிபொருட்களில் ஒன்றை வைக்கும் CCTV காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.
தனது குடும்பத்தினரைக் கொன்றுவிட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் சேர விரும்புவதாக ஜப்பார் பதிவு செய்த பல திடுக்கிடும் வீடியோக்கள் FBI விசாரணையில் வெளிவந்துள்ளது.
முன்னதாக, லாஸ் வேகாஸில் ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டலில், டெஸ்லா சைபர் ட்ரக் ஒன்று வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றும் 7 பேர் காயமடைந்துள்ளனர். நியூ ஆர்லியன்ஸ் வாகனத் தாக்குதலுக்கும், லாஸ் வேகாஸ் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
பதவி விலகும் அதிபர் ஜோ பைடன், எந்த விதமான வன்முறைக்கும் எந்த நியாயமும் இல்லை என்றும், நாட்டின் எந்தவொரு சமூகத்தின் மீதும் எந்த தாக்குதலையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதே சமயம், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், நியூ ஆர்லியன்ஸ் வன்முறை தாக்குதலை சட்டவிரோத குடியேற்றத்துடன் தொடர்புபடுத்தி கண்டனம் தெரிவித்துள்ளார். " இத்தகைய தீய செயலில் இருந்து நாட்டை காப்பாற்ற தனது புதிய நிர்வாகம் துணை நிற்கும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
சமீப காலமாக, அப்பாவி பொது மக்களுக்கு எதிரான வன்முறை தாக்குதலில், வாகனங்களே ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக பொது மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது மிகவும் கடினம் என்று காவல் துறை உயர் அதிகாரிகள் அதிகாரிகள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.