புத்தாண்டு கொண்டாட்டம்! - விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும்.
அனைத்து நுழைவுவாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும், விருந்து நடைபெறும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
வாகனங்களின் விவரங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும்.
கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் உறுதி தன்மைமையை உறுதி செய்ய பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.
வாகனங்களை அந்தந்த ஹோட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்த வேண்டும், சாலைகளில் எந்த காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.
மதுபானங்களை அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாற வேண்டும். 21 வயதுக் உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் வழங்கக்கூடாது.
காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.
கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும், பெண் பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும்.
வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.