புத்தாண்டு கொண்டாட்டம் - சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா தளத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்களுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள காமராஜர் அணை மற்றும் பைன் மரக்காடுகளை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
இதனிடையே கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளதால் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படும். அதன்படி, புத்தாண்டு தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குறைவான பயணிகளே வருகை தந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கொடைக்கானல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரம் கூட்டம் அதிகம் இல்லாததால் நட்சத்திர ஏரி, கோக்கஸ் வாக், பிரைன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் பொழுதைக் கழித்து விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
புத்தாண்டு விடுமுறையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், விடுமுறை நாட்களையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தொடர்ந்து குடும்பமாக அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர்.