புத்தாண்டு வாழ்த்து கூறும் போது தகராறு - சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை!
சென்னை காசிமேட்டில் புத்தாண்டு வாழ்த்து கூறியதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காசிமேட்டை சேர்ந்த குமரேசன் என்பவர், தனது நண்பர் ராகேஷுடன் சேர்ந்து உணவு வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டிருந்த 3 பேர், குமரேசனுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பின்னர் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் குமரேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த அவரது தந்தை விஸ்வநாதன் மற்றும் நண்பர் ராகேஷ் ஆகியோரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள், குமரேசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த விஸ்வநாதன், ராகேஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தொடர் குற்றவாளிகளான பட்டு சரவணன், ஆகாஷ் மற்றும் அபினேஷ் ஆகியோர் என தெரியவந்தது.
மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உயிரிழந்த குமரேசனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.