புஷ்பக் விரைவு ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரப்பிய தேநீர் விற்பனையாளர் - அஜித் பவார் தகவல்!
புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து நேரிட்டதாக மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
Advertisement
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் தீப்பிடித்ததாக பரவிய வதந்தியால், ரயிலில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.
அவசரமாக இறங்கிய பயணிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் வந்த பெங்களூரு விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், விபத்து குறித்து புனேவில் பேட்டியளித்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், புஷ்பக் விரைவு ரயிலில் தீ பரவியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால்தான் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.
தேநீர் விற்பனையாளர் கூறிய தகவலை பொது பெட்டியில் பயணம் செய்த இருவர் மற்ற பயணிகளிடம் கூறியதாகவும், இதனால் ஏற்பட்ட பீதியால் விபத்து நிகழ்ந்ததாகவும் அவர் கூறினார். வதந்தியை பரப்பிய இருவரும் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அஜித் பவார் தெரிவித்தார்.