புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையர்! : கடிந்துகொண்ட காவல் ஆணையர்!
நெல்லையில் பணியின்போது புஷ்பா-2 படம் பார்த்த உதவி ஆணையரை, காவல் ஆணையர் மூர்த்தி வாக்கிடாக்கி மூலமாக கடிந்துகொண்டார்.
திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 4 பெண் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு தலைமை தாங்க வேண்டிய உதவி ஆணையர் செந்தில்குமார், பணிநேரத்தின் போது புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் மூர்த்தி, உடனடியாக செந்தில்குமாரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.
காவல் ஆணையர் தொடர்புகொள்வதை அறிந்த செந்தில்குமார், பதறியடித்துகொண்டு தியேட்டரில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து தச்சநல்லூர் பகுதியில் ரோந்தில் இருப்பதாக காவல் ஆணையரிடம் செந்தில் குமார் பொய் கூறியுள்ளார்.
எனினும் அவர் திரைப்படம் பார்க்க சென்றதை அறிந்த காவல் ஆணையர் மூர்த்தி, எந்தவித பொறுப்பும் இன்றி தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கிறீர்கள் எனக்கூறி உதவி ஆணையரை கடிந்துகொண்டார்.