"பேசும் தெய்வம்" சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் - சிறப்பு தொகுப்பு!
"பேசும் தெய்வம்'' என்று பக்தர்களால் போற்றப்படும், ஒரு அம்மன் கோயில் தமிழகத்தில் உள்ளது. அந்த அற்புத அம்மன் கோயிலைப் பற்றி ஆலயம் அறிவோம் பகுதியில்இப்போது பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில், சங்கரநயினார் திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லையில் இருந்து 52 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.
சிவபெருமான் சங்கரலிங்க சுவாமியாகவும், அம்பிகை கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மனாகவும் அருள்புரியும் இத்தலம், தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குகிறது.
உக்கிரபாண்டியன் என்னும் மன்னனால் இக்கோயில் 943 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டதாக தலபுராணம் கூறுகிறது.
சங்கரன் கோவில் முகப்பில் நூற்றி இருபத்தைந்து அடி உயரமுள்ள 9 நிலை கொண்ட ஒரு பெரிய கோபுரத்துடன் சங்கரன்கோயில் திகழ்கிறது.
இக்கோவிலில் சங்கரலிங்கர், கோமதியம்மை, சங்கரநாராயணர் ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளன.
சங்கரன்கோவிலில், சிவபெருமானுக்குத் துளசி மாலையும், வில்வ மாலையும் அணிவித்து பூஜைகள் நடக்கின்றன. மேலும், காலை பூஜையின் போது, துளசி தீர்த்தமே பிரசாதமாக கொடுக்கப் படுகிறது.
இந்தத் திருக்கோயிலில், ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன. அவை அக்கினி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கவுரி தீர்த்தம் என்பது ஆகும். இந்த கோவிலின் தலமரமாக புன்னை மரம் விளங்குகிறது.
ஸ்ரீசங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக, ஸ்ரீ கோமதி அம்மன் கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில், இறைவன், சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி ஆகிய திருப் பெயர்களால் அழைக்கப் படுகிறார்.
சங்கரன்கோவில் தல வரலாற்றில் கோமதி அம்மனை "கூழை நாயகி''என்று குறிப்பிட்டுள்ளனர். கூழை என்றால் "வால் அறுந்த நாகம்'' என்று பொருள்.
அம்பிகையின் நெற்றியின் உள்பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான், சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும். 51 சக்தி பீடங்களில் இது எட்டாவது பீடமாகும். ஸ்ரீ கோமதி அம்மன், ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் எழுந்தருளி இருக்கிறாள்.
ஸ்ரீ கோமதி அம்மனின் மேல் இரு திருக்கரங்களில், பாசம், அங்குசம், மற்றும் கரும்பு வில்லும் அரூபமாக உள்ளன. யாருக்கு இந்த தரிசனம் கிடைக்கிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்று தலபுராணம் கூறுகிறது.
ஆதி பராசக்தி, அரியும் அரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த, ஸ்ரீ சங்கர நாராயணக் கோலம் காண இத்தலத்தில் தவம் இயற்றினாள்.
ஒரு ஆடி மாதத்தில், பௌர்ணமியும், உத்தராட நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில்,சிவபெருமான்,ஸ்ரீ சங்கரநாராயணராக, அன்னைக்குத் தரிசனம் கொடுத்தார். அதே நாளில் ,சங்கன், பதுமன் ஆகிய நாக மன்னர்களும் ,ஸ்ரீ சங்கர நாராயணக் கோலத்தைக் கண்டு களித்தனர்.
இதைக் கொண்டாடும் விழாவாக,ஆடி மாதத்தில், ஆடி தபசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது.
ஆடித்தபசு விழா அம்பாளுக்கு மட்டுமே உரிய விழா என்பதால், அன்று அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருவாள். ஆடி தபசின் கடைசி நாளில் அம்பிகை, தபசு மண்டபத்தில் கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள்.
இத்தலம், மகாயோகினி சக்தி பீடமாக போற்றப்படுகிறது. எனவே, அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சக்கர பீடத்தில், அம்பிகைக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெள்ளியால் செய்யப்பட்ட பாம்பு, தேள் தகடுகளையும் காணிக்கையாகச் செலுத்தி நலம் பெறுகிறார்கள். இந்தக் கோயிலில், அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் சிறப்பானதாகும். கோமதி அம்மன் சன்னதி பிரகாரத்தில், வாயு மூலையில் உள்ள புற்று மண்ணை நெற்றியில் இட்டுக் கொண்டால், வாழ்வில் கெடுபலன்கள் குறையும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி இக்கோயிலில் உள்ளது. ஸ்ரீ கோமதி அம்மனை வாலை குமாரியாக, பாம்பாட்டி சித்தர் வழிபட்டிருக்கிறார்.