பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி - நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய காட்சிகளை நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நீதி கேட்டு அதிமுகவினர் இன்றும் ”யார் அந்த சார்” என்ற பேட்ஜ்ஜூடன் பேரவைக்கு வந்திருந்தனர். மேலும், முதலமைச்சர் நிகழ்ச்சியில் கறுப்பு துப்பட்டா அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர்கள் கறுப்பு உடை அணிந்திருந்தனர். ”
டங்ஸ்டன் தடுப்போம், மேலூர் காப்போம்” என்ற முகக்கவசத்தையும் அணிந்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்த எந்த காட்சிகளும் நேரலையில் காண்பிக்கப்படவில்லை.
மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, நேரலையில் அவரை காட்டாமல், சபாநாயகர், முதலமைச்சர் உள்ளிட்டோரே காண்பிக்கப்பட்டனர். ஆனால், ஆளும்கட்சியினர் பேசிய அனைத்து காட்சிகளும் தவறாமல் நேரலை செய்யப்பட்டன. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.