பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் பாஜக மனுத்தாக்கல்!
பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, பச்சரிசி, கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
கடந்தாண்டு போல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் இடம்பெறாத நிலையில், பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.
இதுதொடர்பாக தலைமை செயலாளர், வருவாய்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டோருக்கு பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் மனு அளித்திருந்தார்.
அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் பொங்கல் தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் நிலையில், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.