போதைப்பொருள் கடத்தல் வழக்கு! : சாட்சி ஆவணப்பதிவு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுக-வை தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், சாட்சி ஆவணப்பதிவு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக-வின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
அப்போது ஜாபர் சாதிக்குடன் திமுக-வை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
தொடர்ந்து திமுக-வின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஒரு கோடி ரூபாய் நஷ்டயீடு கேட்டு திமுக-வின் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொது தளங்களில் இருந்த தகவல்களின் அடிப்படையிலேயே ட்வீட் செய்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நடந்த விசாரணையில் சாட்சி ஆவணப்பதிவு நடத்த உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.