போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
சென்னை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை திமுக அரசு முறையாக நடத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஏபிவிபி மாணவ அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக அவர்களை போலீசார் கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்தனர்.இந்த வழக்கில் ஜாமின் வழங்கக்கோரி கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஒரு மாதம் கல்லூரி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றுமாறும்,அதுதொடர்பான அனுபவங்களை தங்கள் கைப்பட எழுதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி, மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.