மகாகவி பாரதி - தேசியம் பாடிய கவி சிங்கம் - சிறப்பு தொகுப்பு!
மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்த நாள் தேசிய மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. கருவிலே திருவாய்க்கப் பெற்றஅந்த மகாகவி பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நமக்கு தொழில் கவிதை நாட்டுக்குழைத்தல் என்று அறிவித்தவர். மேலும், நாட்டுக்கு உழைக்கும் பணியை முன்வைத்து, அப்பணிக்கு கவிதையை வலிமையான ஆயுதமாக பயன்படுத்தியவர் மகாகவி பாரதி.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் கிராமத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மகாகவி பிறந்தார். தந்தை சின்னசாமி ஐயர், தாயார் லட்சுமி அம்மாளும் , மகாகவிக்கு சுப்பையா என்று பெயரிட்டனர்.
ஏழு வயதில் தமிழில் கவிதைகள் எழுதத் தொடங்கி,11 வயதில், கற்றறிந்தோர் சபையில் சான்றோர்களால் பாராட்டப் பெற்றார். எட்டயபுரம் சுப்பையா" என்று அழைக்கப்பட்ட சிறுவன் எட்டையபுரம் ராஜாவால், "பாரதி" என்று அழைக்கப்பட்டு , பின்னர் தேசியவாதிகளாலும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழ் மக்களாலும் "பாரதியார்" என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார்.
1897 ஜூன் மாதம், பாரதிக்கு செல்லம்மாளுடன் திருமணம் நடந்தது. அந்த காலத்தில் பாரதியின் தந்தையின் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கடன் பெருகியது. கையிலிருந்த செல்வம் யாவும் கரைந்தது. தந்தையின் உடல்நலம் கெட்டது. தாங்கொணாத இழப்புகளால் பாரதியின் தந்தை காலமானார். 15-ஆம் வயதில் பாரதியாரின் கல்வி தடைப்பட்டது.
இந்நிலையில், மனைவி செல்லம்மா கடையத்தில் அவரது தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பாரதி தனது பாட்டியுடன், பிறந்து வளர்ந்து படித்துப் புழங்கிய எட்டயபுரம் மண்ணைவிட்டு காசிக்குச் சென்றனர். காசிக்குச் சென்ற பாரதி, அலகாபாத் பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காசியில் வாழ்ந்தார் பாரதியார். பன்மொழிப் புலவராக விடுதலை வேட்கை கொண்ட வேங்கையாக , பல் சமயப் பொறையுடைய அறிஞராக , தத்துவ ஞானியாக பாரதியாரைப் பக்குவப்படுத்திக் கொடுத்த பெருமை காசிக்கு உண்டு.
பாரதியின் உள்ளார்ந்த சிந்தனைகளில் கூடுதல் தெளிவுடன் உள்ளொளி பெருக்கிய காசிநகர் வாழ்க்கையே, முண்டாசு தலைப்பாகையும் முறுக்கு மீசையும் எனப் பாரதியின் புறத்தோற்றத்தையும் மாற்றி அமைத்தது.
காசியிலும், சூரத் நகரிலும் நடந்த, இந்திய தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் பங்கேற்ற பாரதி, தேசியவாத இயக்கத்தை வலுப்படுத்த தனது ஆலோசனைகளை வழங்கினார். தமிழகம் திரும்பிய பாரதி,1904 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் நவம்பர் வரை மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பாரதியின் வாழ்க்கையில் பல ஆண்டுகள் பத்திரிகைத் துறையில் கழிந்தன. வீரம் மிக்க ஒரு இளைஞனாக 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் , “சுதேசமித்ரன்” இதழில் துணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா, விஜயா ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்று முழக்கங்களை முன்வைத்து 1906 ஆம் ஆண்டு "இந்தியா" தமிழ் இதழியலில் ஒரு புதிய தடத்தைப் பதித்தது.
புரட்சி இதழ் என்று பறைசாற்றும் வகையில், இதழை சிவப்பு தாளில் பாரதி, அச்சிட்டார். "இந்தியா" இதழ் தான், தமிழ்நாட்டில் அரசியல் கார்ட்டூன்களை வெளியிட்ட முதல் பத்திரிகை ஆகும்.
தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள், கட்டுரைகள், படைத்து மக்களுக்கு தேசிய உணர்வை ஊட்டிய காரணத்தால்,“தேசிய கவி” என அனைவராலும் பாரதி போற்றப்பட்டார்.
அந்த கால கட்டத்தில், ஆங்கிலேயரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்தது. விடுதலை உணர்வை ஊட்டிய தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, மித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், இந்தியா ஆசிரியர் சீனிவாசன் என விடுதலைக்குப் போராடிய பலரையும் ஆங்கிலேய அரசு சிறையிலடைத்து கொடுமை செய்தது. இந்த சூழலில் இந்தியா இதழின் ஆசிரியரான பாரதியை கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது.
இந்த சூழ்நிலையால் தான், 1908ம் ஆண்டு, அன்றைய பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்ட பாண்டிச்சேரிக்குச் சென்று, “இந்தியா” இதழைத் தொடர்ந்து வெளியிட பாரதி முடிவு செய்தார்.
10 ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வாழ்ந்த காலத்திலும், தனது துடிப்பான எழுத்துக்களால், தமிழ் இளைஞர்களுக்குத் தேசிய உணர்வை ஊட்டினார் பாரதி. நவம்பர் 1918 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், கடலூர் அருகே பிரிட்டிஷ் இந்தியாவில் நுழைந்த பாரதியை ஆங்கிலேய அரசு கைது செய்தது.
திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டார். பலத்த காயமுற்ற பாரதி சிகிச்சைப் பலனின்றி, 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, தனது 39 வது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வாதி. சாதி ஒழிந்து ,சமத்துவம் நிறைந்த சமுதாயத்தினை காண விரும்பிய சீர்திருத்தவாதி.பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மறைந்து, சனங்கள் சங்கம் முழுமைக்கும் பொதுவுடைமை என்ற புதிய சமுதாயம் காண விரும்பிய புரட்சியாளர்.
தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய ஆசைப் பட்ட தமிழர். பாரதத்தின் பழமை,பாரம்பரியம்,பண்பு,பண்பாடு, வேதம், வேத சமயம்,இதிகாசம் தத்துவம்,கலை ஆகிய அனைத்தின் சாரமும் அறிந்த முழுமையான இந்தியர்.
சமஸ்கிருதம்,இந்தி,பிரெஞ்சு உட்பட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை பெற்ற மகாகவி, யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் என்று தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தியதால்தான் பாரதியின் பிறந்த தினம் தேசிய மொழிகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது.
மகாகவி பாரதியின் வழி, பாரத பண்பாடுகளுடன் தேசிய உணர்வுடன் வாழ்வது தான் மகா கவி பாரதிக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.