மகாராஷ்டிராவில் நாளை பதவி ஏற்கும் மகா யுதி கூட்டணி அரசு!
மகாராஷ்ட்ராவில் நாளை புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பாஜக - சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய, மகாயுதி கூட்டணி வரலாற்று வெற்றி பெற்றது. அதன்படி இந்த கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 233ஐ கைப்பற்றியது. இதில், பாஜக மட்டும் 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
சிவசேனா 57 மற்றும் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றன. இதனையடுத்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும், பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸூக்கும் இடையே முதலமைச்சர் பதவி தொடர்பாக போட்டி நிலவிவந்தது.
இதனையடுத்து மகாராஷ்டிரா முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக் குழுவை பாஜக நியமித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டதாக அக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அரசு பதவியேற்கவுள்ளது.