மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி - தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மீதும் பிரதமரின் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக இமாலய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
பலதரப்பட்ட மக்கள் வாழும் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்த அவர், இந்த வெற்றியை பெற்றுத்தந்த பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மகாராஷ்டிர மாநில தேர்தல் வெற்றியை ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கருத்தாக பார்ப்பதாகவும், பாஜக மீதும், பிரதமர் மோடியின் திட்டங்கள் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இந்த வெற்றி பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.