மகா கும்பமேளாவிற்காக முழு வீச்சில் தயாராகி வரும் பிரயாக்ராஜ் நகரம்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவிற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வரும் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கும்பமேளாவின்போது, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில், சுமார் 40 கோடி பேர் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, பிரயாக்ராஜ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. கும்பமேளாவுக்காக உத்தரப்பிரதேச அரசு சுமார் 6 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கும்பமேளாவுக்கு வரும் பார்வையாளர்களைக் கவர்வதற்காக லேசர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 2 ஆயிரம் டிரோன்கள் வானில் பறந்தபடி புராண காட்சிகளை லேசர் ஒளியில் காட்சிப்படுத்த உத்தரப்பிரதேச சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைகளுக்காக இந்திய ராணுவம் முகாம்களை அமைத்துள்ளது.
வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் இங்கு பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்த மாதத்திற்கான மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாகவும், இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்கும்போது, பிரிவினை மற்றும் வெறுப்பு உணர்வை ஒழிக்க உறுதியேற்போம் என்றும் குறிப்பிட்டார். மகா கும்பமேளா என்பது ஒற்றுமையின் அடையாளம் என்றும், இவ்விழா அனைவரும் சமம் என்பதை பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.