மக்களவையில் காரசார விவாதம் : ஜேபிசி பரிசீலனையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா - சிறப்பு தொகுப்பு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் நடைபெற்ற காரசார விவாதங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடைபெறுவதால், கால விரயம் ஏற்படுவதுடன், பண விரயமும் ஆகிறது. இதனால்,
மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு முன்மொழிந்தது. அதற்கு மத்திய அமைச்சரவையும் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதை சட்டமாக்குவதற்கான மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து மசோதா மீது காரசார விவாதம் நடைபெற்றது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையடுத்து பேசிய சமாஜ்வாடி எம்.பி. தர்மேந்திர யாதவ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி ஆகியோர், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கே இந்த மசோதா விரோதமானது என குற்றம்சாட்டினர்.
தொடர்ந்து பேசிய திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திருத்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதை மேற்கோள்காட்டினார். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓர் அரசை தேர்வு செய்யும் நடைமுறை, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா சிதைத்துவிடும் என்றும் தனது எதிர்ப்பை அவர் பதிவு செய்தார்.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால், பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யோசனை தெரிவித்தார். கூட்டுக் குழு பரிசீலனைக்கு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு ஆதரவு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அமித் ஷா, மசோதா மீது ஒவ்வொரு நிலையிலும் விரிவான ஆலோசனை நடைபெற வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத் திருத்த மசோதா மீது மக்களவையில் மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்.பி.க்களும், எதிராக 198 பேரும் வாக்களித்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தன.
பின்னர், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்புவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 220 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 149 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்ற மின்னணு வாக்கெடுப்பு முறையில், விருப்பமில்லாத உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவையில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு 90 நாட்களில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது. மேலும், கூட்டுக்குழுவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் அங்கு இந்த மசோதா ஏற்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்திருத்த மசோதா மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.