மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியாத அவலம், இதுதான் திராவிட மாடலா? - எல்.முருகன் கேள்வி!
திமுக ஆட்சியில் மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை கூட வழங்க முடியவில்லை என்றும் இதுதான் திராவிட மாடலா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : " பல்லாவரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் குடித்ததில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீருடன் கழிவுநீர் கலந்ததும், அதனை தெரியாமல் குடித்த மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிற்கே முன்மாதிரி எனக் கூறிக்கொள்ளும் இந்த போலி திராவிட மாடல் அரசு, மிக மிக அடிப்படையான பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கூட விநியோகம் செய்ய முடியாத அவல நிலையில் இருப்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஒரு புறம் புயல் பாதிப்பால் வட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வாய்ஜாலம் பேசும் திமுக அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் புயல்- மழையால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் தவிர்த்து இருக்கலாம்.
கையாலாகாத திமுக அரசு மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். பெருமளவில் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
தங்கள் பகுதிகளுக்கு வந்து பார்வையிட வரும் திமுகவினரைக் கூட மக்கள் அனுமதிக்க தயாரில்லை. மழைக் காலங்களில் குடிநீரை பாதுகாப்பாக விநியோகம் செய்ய வேண்டியது மிக மிக முக்கியமானது. ஆனால் இந்த சம்பவத்தை மறைத்து விடுவதிலேயே இந்த அரசு முனைப்புடன் உள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட மாநில அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்கள் சாப்பிட்ட உணவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நடந்துபோன பெரும் சோகத்தை மறைப்பதற்காக மனசாட்சி இல்லாமல் அமைச்சர் ஒருவரே பொய் பேசுகிறார். உணவில் பிரச்சனை என்றால் ஒரு வீட்டில் தானே பாதிப்பு ஏற்படும். ஒரு பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் எவ்வாறு வயிற்றுப் போக்கு என்றால் எப்படி? நடந்துபோன தவற்றை மறைப்பதில் காட்டும் தீவிரத்தை பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் காட்டியிருக்க வேண்டாமா?
தமிழக அரசு மெத்தனப் போக்குடன் சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி மக்களின் உயிருடன் விளையாடக்கூடாது. இதற்கு எனது கடும் கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன். குடிநீரில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்யவும் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மக்களை காப்பதிலும் அவர்களுக்கு தேவையான, அடிப்படையான விஷயங்களை செய்வதிலும் இந்த அரசுக்கு ஆர்வம் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கூட திராணியற்ற இந்த அரசை இனிமேலும் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டோகளுக்கு போஸ் கொடுத்து, வெற்றுப்பேச்சு பேசி இந்த அரசை நடத்துவதை நிறுத்த வேண்டும். நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன் வரவேண்டும்.
மழைக்காலம் இன்னமும் தொடர்வதால் தமிழக அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இல்லை என்றால் வரும் சட்டமன்ற தேர்தலில், இந்த மக்கள் விரோத அரசை தூக்கி எறிய மக்கள் தயங்க மாட்டார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.