மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் - சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!
மதுரையில் 31 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கத்தின் தலைவர் தேவசகாயம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், மதுரை தல்லாகுளத்தில் 31 ஏக்கர் நிலம் ஏழை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஒப்படைக்கப்பட்டது எனவும், இந்த நிலம், மதுரை - ராமநாதபுரம் திருமண்டல சிஎஸ்ஐ நிர்வாகம் மூலம் மோசடியாக விற்பனை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நில மோசடிக்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர் எனவும், பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என்றும், எனவே, சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.