மதுரையில் தடையை மீறி பாஜக மகளிர் அணி பேரணி - குஷ்பு உள்ளிட்டோர் கைது!
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெற்றது. முன்னதாக செல்லாத்தம்மன் கோயில் முன்பு பெண்கள் மிளகாய் அரைத்து கண்ணகி அம்மனுக்கு பூசியும் தீச்சட்டி ஏந்தியும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். மேலும், பாஜக பெண் நிர்வாகி ஒருவர், கண்ணகி வேடத்தில் சிலம்பைக் கையில் ஏந்தியபடி மாணவிக்கு நீதி கேட்டு முழக்கம் எழுப்பினார்.
தொடர்ந்து பேரணியில் உரையாற்றிய பாஜக மகளிர் அணி மாநிலத் தலைவர் உமாரதி ராஜன், இந்தப் பேரணி அரசியல் விளம்பரம் இல்லை எனவும் பெண்களுக்கான விழிப்புணர்வு போராட்டம் எனவும் கூறினார்.
பின்னர், சிலம்பைக் கையில் ஏந்தியபடி பேசிய குஷ்பு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெண்களை காப்பாற்ற திறமையில்லை என விமர்சனம் செய்தார். அந்த சார் யார் என்பதை காவல்துறை இதுவரை ஏன் கண்டுபிடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தார்.
இதையடுத்து தடையை மீறி பாஜக மகளிர் அணியினர் மதுரையில் இருந்து சென்னை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.