மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தை குறிக்கும் நிகழ்ச்சியாக மார்கழி மாதத்தில் அஷ்டமி சப்பரம் என்னும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சுந்தரேசுவரர்- பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் தனித்தனியாக சப்பர தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
வாத்தியம் முழங்க வீதியுலா சென்ற தேரின் பின்னால், சிவாச்சாரியார்கள் அரிசியை தூவி சென்றனர். கீழே சிதறி கிடக்கும் அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் பசிப்பிணி நீங்கும் என்பது ஐதீகம்.
அதனால், சாலையில் கிடந்த அரிசியை பக்தர்கள் எடுத்து சென்றனர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.