மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான வழக்கு - முரசொலி அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!
அரசியலுக்கு வந்துவிட்டால் எதையும் தாங்கக்கூடிய காண்டாமிருகத்தின் தோல் போல் இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடர்ந்த வழக்கில் முரசொலி அறக்கட்டளைக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியது குறித்து முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் செயல்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து முரசொலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய விளக்கம்பெற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அரசியலுக்கு வந்துவிட்டால் எதையும் தாங்கக்கூடிய காண்டாமிருகத்தின் தோல் போல் இருக்க வேண்டும் என முரசொலி அறக்கட்டளைக்கு அறிவுரை வழங்கினர்.