மறைந்த மன்மோகன் சிங் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு!
சீக்கிய மரபின்படி தகனத்துக்கு பின்னரான சடங்குகள் செய்யப்பட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைக்கப்பட்டது.
வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26-ம் தேதி இரவு காலமானார்.
இதனையடுத்து அவரது உடல் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்றைய தினம் டெல்லி நிகாம் போட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சீக்கிய மரபின்படி, தகனத்துக்குப் பின்னரான சடங்குகளை செய்வதற்காக, அவரது அஸ்தி இன்று சேகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கவுர் தகனத்துக்குப் பின்னரான சடங்குகளை செய்தார். பின்னர் யமுனை நதியில் மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைக்கப்பட்டது.