மயிலாப்பூரில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
சென்னை மயிலாப்பூரில் மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள், கடந்த செப்டம்பர் மாதமே நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை முழுமை பெறவில்லை. குறிப்பாக, மயிலாப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது எனவும், இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து உள்ளிட்டவை ஏற்படுகிறது என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், மழைகாலங்களில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.