மரண பிடியில் கேரள நர்ஸ் - ரத்தப்பணம் மூலம் காப்பாற்ற முயற்சி - சிறப்பு தொகுப்பு!
கொலை வழக்கு ஒன்றில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு ஏமன் நாட்டு அதிபர் ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழக்கின் பின்னணி என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 35 வயதான நிமிஷா பிரியா, தன்னுடைய குடும்பத்தை ஏழ்மையில் இருந்து மீட்கும் கனவுகளுடன் 2008ம் ஆண்டு ஏமன் நாட்டுக்கு நர்ஸ் வேலைக்காக சென்றார்.
ஏமனில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் நர்ஸாக நிமிஷா பணிபுரிந்தார். சொந்தமாக ஒரு சிறு மருத்துவமனை தொடங்க விரும்பிய நிமிஷா, 2015 ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த (Talal Abdo Mahdi) தலால் அப்டோ மகதி என்பவருடன் இணைந்து ஒரு சிறிய மருத்துவமனையைத் தொடங்கினார்.
மகதி, நிமிஷாவின் திருமண புகைப்படங்களை திருடி, அதை மார்பிங் செய்து இருவருக்கும் திருமணம் நடந்ததாக ஏமனில் கூறியிருக்கிறார். நிமிஷாவைத் திருமணம் செய்து கொண்டதால், மருத்துவமனை வருமானம் மொத்தமும் தனக்கே சொந்தம் என்றும் தெரிவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை அபகரித்து கொண்ட மகதி, நிமிஷாவை சித்தரவதையும் செய்திருக்கிறார்.
2017ம் ஆண்டு பாஸ்போர்ட்டை எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட மயக்க மருந்து அதிகமானதால் தலால் அப்டோ மகதி இறந்து விடுகிறார். மயக்க மருந்து செலுத்திக் கொன்றதாக நர்ஸ் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 2020ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விசாரணை நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை கொடுத்தது. தீர்ப்பை எதிர்த்து, நிமிஷா சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2023ம் ஆண்டு, நவம்பர் மாதம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மரண தண்டனையை உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து, ஏமன் நாட்டு அதிபரிடம் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், நிமிஷாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ரஷாத் அல் அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, விரைவில் நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஆண்டு, இந்திய அரசு விடுத்த கோரிக்கையை மதித்து, பல மாதங்களாக நிமிஷா மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திடாமல் இருந்தார் ஏமன் அதிபர்.
ஏமன் அதிபர் அளித்துள்ள ஒப்புதல், அரசு வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பிறகு அவர் மரண தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிப்பதற்கு முன், நிமிஷாவுக்கு தண்டனை வழங்குவதில் ஆட்சேபம் உள்ளதா என மகதியின் குடும்பத்தினரிடம் கேட்பார் . அவர்கள் விருப்பமில்லை என்றோ, நிமிஷாவை மன்னிக்கலாம் என்றோ கூறிவிட்டால் உடனே தண்டனை நிறுத்தப்படும்.
சுமார் 34 லட்சம் ரூபாய் இரு தவணைகளாக, இந்திய வெளியுறவுத் துறையால் நியமிக்கப்பட்ட ஏமன் நாட்டின் வழக்கறிஞரின் கணக்கில் செலுத்தப்படும் என்பதே ரத்தப்பணம் கொடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.
ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினரிடம் ரத்தப் பணம் (Blood money) என்னும் இழப்பீடு தொகை கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியும்.
முதல் தவணை பணம் , கடந்த ஜூன் மாதமே அனுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை பணம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதியே அனுப்பப்பட்டு விட்டதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்குள் ஏமன் அதிபரின் ஒப்புதல் உத்தரவு வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஏமன் தலைநகர் சனாவை ஹவுதி தீவிரவாத அமைப்பினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 2017ம் ஆண்டு, ஏமன் அதிபர் கொல்லப்பட்டு, ஹவுதிகள் கையில் ஆட்சி அதிகாரம் சென்றது. அப்போதிலிருந்தே ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு வெடித்த உள்நாட்டு போருக்குப் பின், ஏமனில் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது. எனவே 10 ஆண்டுகளுக்கு முன்பே, ஏமனில் உள்ள தூதரகத்தை இந்திய அரசு மூடிவிட்டது. எனவே நிமிஷாவைக் காப்பாற்றுவதற்கான செயல்முறையில் பல சவால்கள் உள்ளன.
நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
30 நாட்களே இருக்கும் நிலையில், மகதியின் குடும்பம் மனது வைத்தால் மட்டுமே நிமிஷாவை காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கையில் தான் மகளைக் காப்பாற்ற நிமிஷாவின் அம்மா பிரேமா போராடி வருகிறார்.