மருத்துவ கழிவுகளை கையாள்வதில் அரசு தோல்வி - கேரள உயர் நீதிமன்றம் கண்டனம்!
மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள், திடக்கழிவுகள், கோழி இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை தமிழக - கேரள எல்லையில் உள்ள நெல்லையின் கிராம பகுதிகளில் கொட்டி செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரிகள், நெல்லை நடுக்கல்லூர் பகுதிகளில் கொட்டிவிட்டு சென்றன. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பெச்சு குரியன் தாமஸ், பி.கோபிநாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரளாவில் உள்ள மருத்துவ கழிவுகளை அண்டை மாநிலத்தில் கொட்டியது மிகவும் அபாயகரமான போக்கு என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.