மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!
கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் படிக்கும் 3 ஆயிரம் மாணவர்களை கிழக்கு கடற்கரைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
அப்போது, மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதையடுத்து மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கிய ஆளுநர் ரவி, அவர்களை சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்தார்.
இதை தொடர்ந்து மாணவர்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வி மட்டும் தான் நமக்கு அனைத்தையும் வழங்கும் என்றும், மாணவர்கள் அனைவரும் கடினமாக படிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார்.
மேலும், அனைவரும் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனக்கூறிய ஆளுநர், மாணவர்கள் ஒரு நாளைக்கூட வீண்டிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.