மானாமதுரை அருகே தூர்வாரப்படாத கால்வாய் - தரிசாக கிடக்கும் 200 ஏக்கர் நிலம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கால்வாய்கள் தூர்வாரப்படாததால் 200 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தெ.புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள கண்மாயை நம்பி 480 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை ஆற்றில் இருந்து நேரடி பாசன கால்வாய் இருப்பதால், ஆண்டுதோறும் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டால் கண்மாய் நிரம்பிவிடும்.
இந்நிலையில், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் குப்பைமேடாக காட்சியளிக்கிறது. கண்மாய்கள் நிரம்பியபோதும் பல பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாமல், சுமார் 200 ஏக்கர் நிலங்கள் தரிசாக காணப்படுகின்றன.
இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், கால்வாயை தூர்வார பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், கால்வாயை ஒட்டியுள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.